லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வரும் சீரியல் கில்லர் (LCU) படங்களின் வரிசையில் அடுத்த படம் லியோ.

அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள விஜய் நடித்த லியோ படத்தின் ப்ரோமோ வேலைகள் ஒருபுறம் நடந்து வர அதை மிஞ்சும் வகையில் மற்றொருபுறம் இந்த படம் குறித்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆடியோ ரிலீஸ் ரத்து, தணிக்கை செய்யப்பட்டாத டிரெய்லரை திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியிட்டது, திரையரங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட தொடர் சர்ச்சைகளுக்கு நடுவே இந்தப் படத்திற்காக நடனமாடிய சிலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது.

லியோ படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு 2000 நடன கலைஞர்களைக் கொண்டு படமாக்கப்பட்டது ஆனால் சின்னத்திரை பெரியத்திரை என பதிவுசெய்யப்பட்ட நடன கலைஞர்கள் 600 பேர் மட்டுமே லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்பதால் உறுப்பினர் அல்லாதவர்கள் 1200 பேர் இதில் நடனமாடியுள்ளனர்.

ரிச் கேர்ள்ஸ் / ரிச் பாய்ஸ், மாடல்ஸ் என்று அழைக்கப்படும் உறுப்பினர்கள் அல்லாத இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1750 வீதம் 6 நாட்களுக்கு மொத்தம் ரூ. 10,500 வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதில் சிலர் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்திருந்தனர் இது வைரலானதை அடுத்து இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆர்,கே, செல்வமணி தலையிட்டார்.

ஆர்.கே. செல்வமணி நடத்திய விசாரணையில் 6-6-2023 முதல் 11-6-2023 வரை 6 நாட்கள் நடைபெற்ற பாடல் காட்சி படப்பிடிப்புக்கான ஊதியம் + பேட்டா + போக்குவரத்து செலவினங்கள் என மொத்தம் ரூ. 94,60,500 அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது தவிர உறுப்பினர் அல்லாத இந்த நடன கலைஞர்களை ஒருங்கிணைத்த தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக சர்வீஸ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆர்,கே, செல்வமணி-யின் இந்த அறிவிப்பை அடுத்து லியோ படத்தில் இடம்பெற்ற நடனக்கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.