டெல்லி: மத்தியஅரசு பொருளாதரத்தில் பின்தங்கிய  உயர் வகுப்பினர் இடஒதுக்கீடு பெற வருமான வரம்பு ரூ.8லட்சம் என நிர்ணயித்திருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த மத்தியஅரசின் குழு, ரூ8 லட்சம் சரியானதுதான் என அறிக்கை அளித்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்தியஅரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு வருமான வரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கின் விசாரணையின்போது, உயர் வகுப்பினருக்கான வருமான வரம்பு 8 லட்ச ரூபாய் என்பதை எதன் அடிப்படையில் நிர்ணயித்தீர்கள் என  சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. மேலும், வருமான வரம்பு குறித்து மறுஆய்வு செய்யவும் அறிவுறுத்தியது. அதையடுத்து,  வருமான உச்ச வரம்பை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினரை தீர்மானிக்க, 8லட்ச ரூபாய் ஆண்டு வருமான உச்சவரம்பு நடைமுறையைத் தொடரலாம் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதுடன்,  குறைந்தபட்சம், ஐந்து ஏக்கர் விவசாய நிலம் அல்லது அதற்கு மேல் நிலப்பரப்பை வைத்திருக்கும் நபர்களை, இந்தப் பயனை அனுபவிப்பதிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நடப்பாண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கை பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து உச்சநீதி மன்றத்தில் விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது.