மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்-கிற்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி எனும் இடத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த சத்யபால் மாலிக்,

“பா.ஜ.க. வைச் சேர்ந்த மாவட்ட அளவிலான தலைவரோ அல்லது தேசிய அளவிலான தலைவரோ எந்த ஒரு தலைவரும் மீரட், முசாபர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய கிராமத்தில் கூட நுழைய முடியாது.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் உ.பி.யில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது” என்று எச்சரித்தார்.

அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யபால் மாலிக். “ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த போது அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நபருக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ. 300 கோடி தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள்

நான் அதற்கு இணங்கவில்லை, இதுகுறித்து பிரதமரிடம் புகாரளித்தேன்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக் தற்போது ஹரியானா மாநிலம் தாத்ரீ நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டம் குறித்தும் விவாசாயிகளின் வேதனை குறித்தும் பேச சென்ற என்னிடம் பிரதமர் மிகவும் கர்வமாக நடந்துகொண்டார் “எனது மாநிலத்தில் 500 விவசாயிகள் இந்த போராட்டத்தால் உயிரிழந்திருக்கிறார்கள்” என்று நான் கூறியதற்கு “அவர்கள் எனக்காகவா இறந்தார்கள்” என்று விவசாயிகளின் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, “நீங்கள் தான் ஆளுகிறீர்கள் அவர்கள் உங்களுக்காக உங்களால் தான் இறந்தார்கள் என்று அவரிடம் நான் வாக்குவாதம் செய்தேன் அதன் பின் என்னை உள்துறை அமைச்சர் அமித் ஷா-விடம் சென்று பேசச்சொல்லி அனுப்பினார்” என்று அந்த கூட்டத்தில் சத்யபால் மாலிக் பேசினார்.

இதுவரை ஆளுநர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் இடையே மட்டுமே மோதல் போக்கு நிலவி வந்துள்ள நிலையில், தற்போது ஒரு மாநில ஆளுநர் பிரதமர் மீது குறைகூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.