சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மோடி தலைமையிலான மத்தியஅரசு, விவசாயிகளை நசுக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு (2020) இயற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில்  9 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தியஅரசு விவசாயிகளின் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என   கேரளா, பஞ்சாப், சத்திஸ்கர், டெல்லி, ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்களில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சிக்கு வந்ததும், சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்துள்ளதால், தற்போது நடைபெற்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொரின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, இன்று  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

அதற்கான தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேரவையில் முன்மொழிந்துள்ளார். அந்த தீர்மானத்தில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.