டில்லி

கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.   இவற்றில் ஒன்று பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்து உற்பத்தி செய்யும் கோவாக்சின் மருந்தாகும்.  மற்றொரு மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் கண்டறிந்து சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மருந்தாகும்.

இதைத் தவிர ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துக்கும் அவசரக்கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   மத்திய அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மருந்துகளை உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறது.

கோவிஷீல்ட் மருந்தின் செயல்பாடுகள் குறித்து இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, கொரோனா வைரசுக்கு எதிராக எதிர்ப்பணுக்களை உருவாக்குவதோடு, ஆயுள் முழுவதும் பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரியவந்துள்ளது.