டெல்லி: நாட்டின் 74வது குடியரசு தின விழா நாளை தலைநகர் டெல்லியில்  பிரமாண்டமாக கொண்டப்பட உள்ள நிலையில், விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல்/சிசி (Egyptian President Abdel Fattah El-Sisi ) கலந்துகொள்கிறார். இதையொட்டி, அவர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக எளிமையாக நடத்தப்பட்ட குடியரசு தின விழா இந்த ஆண்டு கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்திய திருநாட்டின்தலைநகர் டெல்லியில் 74-வது குடியரசு தின  நாட்டின் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்ள எகிப்து அதிபருக்கு இந்தியா சார்பில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை எற்று அதிபர் அப்டேல் எல் சிசி (Egyptian President Abdel Fattah El-Sisi ) அவர் 3 நாள் பயணமாக நள்ளிரவு டெல்லி வந்தடைந்தார்.  எகிப்து நாட்டை சேர்ந்த  ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும். அது மட்டுமின்றி  இந்த ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்துகொள்கிறது.

முன்னதாக டெல்லி விமான நிலையம் வந்தடைந்த சிசியை  மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பில்  இந்தியாவின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமும் இடம் பெற்றது. சிசியுடன் எகிப்து நாட்டின் 5 மந்திரிகளும், மூத்த அதிகாரிகளும், உயர் மட்ட தூதுக்குழுவும் வந்துள்ளது.

இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் இன்று பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

எகிப்து அதிபர் சிசியின் வருகை, இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையேயான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், எகிப்து அதிபர் சிசியும் இன்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இரு நாடுகளும் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறிப்பிடத்தக்கது. இருதரப்பு வர்த்தகம் வளர்ச்சி இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையேயான வர்த்தகம், 2021-22-ம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் 7.26 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.58 ஆயிரத்து 788 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது.

எகிப்துக்கு இந்தியா 3.74 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிடம் இருந்து எகிப்து 3.52 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.