வீட்டு வாடகை வருமானம் ரூ. 20 லட்சத்தை தாண்டினால் ஜிஎஸ்டி உண்டு!! மத்திய அரசு தகவல்

டில்லி:

வீட்டு வாடகை வருமானத்திற்கு ஜிஎஸ்டி.யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வர்த்தக அடிப்படையில் வரும் வாடகை, குத்தகை தொகை வருமானம் ரூ. 20 லட்சத்திற்கு மேல் இருந்தால் அதற்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படும்.

மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறுகையில்,‘‘ வீட்டை கடைக்காகவோ அல்லது அலுவலகத்திற்காகவோ வாடகைக்கு விட்டிருந்தால் ரூ. 20 லட்சம் வருமான வரை ஜிஎஸ்டி கிடையாது. அதேபோல் வீட்டு வாடகை வருமானத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வீட்டை கடை அல்லது அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் வருமானம் ரூ. 20 லட்சத்துக்கு மேல் இருந்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படும்’’ என்று ஜிஎஸ்டி பயிற்சி வகுப்பில் தெரிவித்தார்.

இந்த வரம்பை தாண்டி வருமானம் வந்தால் அவர் ஜிஎஸ்டி நெட்ஒர்கில் இணைந்து வரி செலுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி நெட்ஒர்க் முதன்மை நிர்வாகி பிரகாஷ் குமார் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி இணையத்தில் இது வரை கலால், சேவை மற்றும் வாட் செலுத்துவோர் என மொத்தம் 69.32 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதில் 38.51 லட்சம் பேர் தங்களது பதிவை முழுமையாக செய்துவிட்டனர். இவர்களுக்கு அதற்குறிய சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது.

பழைய வரி விதிப்பு முறையில் ஏற்கனவே 80 லட்சம் பேர் உள்ளனர். மீதமுள்ள 30.8 லட்சம் வரி செலுத்துவோருக்கும் இ.மெயில், எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் செய்வோர், தங்களது தொழில் தொடர்பான அனைத்து விபரங்களையும் பதிவு செய்துவிடமுடியும்.

இது தவிர கடந்த மாதம் 25ம் தேதி முதல் தற்போது வரை புதிதாக 4.5 லட்சம் பேர் ஜிஎஸ்டி இணையத்தில் பதிவு செய்துள்ளனர். ஜிஎஸ்டி.யில் பணியாற்றுவோருக்கும், வரி செலுத்துவோர் ஜூலை முதல் பதிவு செய்துகொள்ளலாம். பதிவை ஆன்லைனில் ரத்து செய்து கொள்ளவும் முடியும்’’ என்றார்.


English Summary
Rental income beyond Rs 20 lakh to attract GST