விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 12ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகையை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, நடிகர் விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.

மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வரும் 15ம் தேதி வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.