டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான (EWS- economically weaker section 10%) இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ரூ.8லட்சம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து 4வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயராக இருப்பதாக  மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதையடுத்து வழக்கு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவர்களுக்கான ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, 8 லட்சம் எந்த அடிப்படையில் வரையறை செய்யப்பட்டு என்பது குறித்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பதற்காக வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தது. மேலும், அதுவரை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறாது என்றும் உத்தரவாதமளித்தது. இதையடுத்து, வழக்கை ஜனவரி 6ந்தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.