சென்னை

மைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில்.அமலாக்கத்துறை மீண்டும் சோதனை இட்டதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி  சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமைச்சரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வரும் 15 ஆம் தேதிவரை  செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இதன் மூலம் 19-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் வசித்து வரும் அவரது பெற்றோர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது ஏன்? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கைத் தேடி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அசோக்கிற்கு எதிராக ஏற்கனவே லுக் அவுட் சுவரொட்டி பிறப்பித்துள்ள நிலையில், அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் பல மாதங்களாகத் தலைமறைவாக உள்ளார்.

எனவே, அசோக்கின் இருப்பிடம் குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை இந்த வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், மீண்டும் இன்று சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.