சென்னை: இருசக்கர வாகனத்தில் விவிபாட் இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டது தொடர்பாக, சர்ச்சைக்குரிய வேளச்சேரி தொகுதியின்  92வது வாக்குச்சாவடியில் 17ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதையடுத்து, வாக்காளர்களுக்கு மறுவாக்குப்பதிவு குறித்த தகவலை தண்டோரா அடித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த  6-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற்று முடிந்தது. தேர்தல் அன்று வேளச்சேரி தொகுதியில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாக, வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி 92ல் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையொட்டி,  மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து அறிவிப்பு ஆணையை வேட்பாளர்களுக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார். மறுவாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பிட்ட 92வது வாக்குச்சாவடியில் 548 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையொட்டி அந்த பகுதியில்,  பணப்பட்டுவாடா மற்றும் விதிமீறல்களை தடுப்பதற்காக குறிப்பிட்ட பகுதியில் இரண்டு பறக்கும் படையினர் கண்கானிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு வாக்குப்பதிவை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஏப். 14) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பபதாவது,

“இந்திய தேர்தல் ஆணையம் 06.04.2021 அன்று எண். 26, வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி, சீதாராம் நகர், வேளச்சேரி, சென்னை – 42 என்ற முகவரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 92-க்கு நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லத்தக்கதல்ல என்றும், மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 58(1)(b)-ன் கீழ் 26. வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி, சீதாராம் நகர், வேளச்சேரி, சென்னை – 42 என்ற முகவரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் மறுவாக்குப்பதிவு 17.04.2021 சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மேற்படி வாக்குச்சாவடியில் 17.04.2021 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

மேலும், இவ்வாக்குச்சாவடியானது ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால், இந்த மறுவாக்குப்பதிவை மேற்படி வாக்குச்சாவடி எண்.92-க்குட்பட்ட 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாக்குப்பதிவின்போது வாக்களிக்கும் நபர்களின் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் எனவும், இந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் 80 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரில் ஏற்கெனவே தபால் ஓட்டு அளித்தவர்களும், அளிக்க இருப்பவர்களும் நேரில் சென்று வாக்களிக்க இயலாது என, மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.