‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், இயக்குநர் வம்சி ஆகியோரின் கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக தொடங்கியது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் என்னுமிடத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது.

தெலுங்கு திரை உலகம் இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான பிரீ லுக் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ஊடக பிரபலம் தரன் ஆதர்ஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் முதல் பிரத்யேக படப்பிடிப்பை மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இந்த திரைப்படத்தை வெளியிடும் தேஜ் நாராயணன் அகர்வால் கேமராவை இயக்க, நாயகன் ரவி தேஜா, நாயகிகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் நடித்தனர். இந்த காட்சிக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கௌரவ இயக்குநராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் திரைக்கதையை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி படக்குழுவினரிடம் சமர்ப்பித்தார்.

டைகர் நாகேஸ்வரராவின் பிரீ லுக்கிற்கான மோஷன் போஸ்டரை மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டு பேசுகையில், ”அனைவருக்கும் தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். டைகர் நாகேஸ்வரராவ் கதையை இயக்குநர் வம்சி இதற்கு முன்னர் கொரோனா காலகட்டத்தின் போது என்னிடம் சொல்லியிருந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்தக் கதையில் என்னால் நடிக்க இயலவில்லை. இப்போது என் தம்பி ரவி தேஜா அதில் நடிக்கிறார். ஸ்டூவர்ட் புரம் நாகேஸ்வரராவ் பற்றி நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று பேசினார்.