கோயம்புத்தூர்:  மாநகரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் (டி.பி.டி.கே) சேர்ந்த பகுத்தறிவாளர்கள் குழு சூரிய கிரகணத்தைப் பற்றிய மூட நம்பிக்கை மற்றும் கட்டுக்கதைகளை நீக்குவதற்காக ஒரு ‘அறிவு விருந்து‘ க்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

26ம் தேதி காலை நகரம் முழுவதும், சூரிய வடிகட்டி கண்ணாடிகளைக் கொண்டு மக்கள் மேகங்களுக்கிடையில் வருடாந்திர சூரிய கிரகணத்தைக் காணப் பெரும் பிரயத்தனப்பட்டனர். மேலும் கறுப்பு நிற உடையணிந்த ஒரு குழு திறந்த வெளியில் நின்று, இட்லி, வட, கிச்சடி போன்றவற்றைக் காலை உணவாக உட்கொண்டிருந்தது.

வானியல் நிகழ்வுகளைப் பற்றிய மூடநம்பிக்கைகளையும் தவறான எண்ணங்களையும் உடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு காந்திபுரத்தில் உள்ள பெரியார் இ.வி.ராமசாமியின் சிலைக்கு முன்னால் நடைபெற்றது.

சூரிய கிரகணத்தை சுற்றி பல மூடநம்பிக்கைகள் இருந்து வருகின்றன. அதாவது கிரகணத்தின் போது மக்கள் வெளியேறக்கூடாது, கர்ப்பிணி பெண்கள் அதைக் காணக் கூடாது, எல்லாவற்றிற்கும் மேலாக கிரகணம் முடியும் வரை ஒருவர் உணவை உட்கொள்ளக்கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன என்று டி.பி.டி.கே தலைவர் கே.ராமகிருஷ்ணன் கூறினார்.

“இந்த கூற்றுகளுக்கு அறிவியலில் எந்த அடிப்படையும் இல்லை. அதைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த நாங்கள் விரும்பினோம். ஆகவே, நாங்கள் ஒரு காலை விருந்தை நடத்தினோம், அங்கு நாங்கள் காலை உணவை பொது வெளியில் வைத்தோம். மேலும் கிரகணத்தின் போது உண்வு உட்கொள்வதில் பார்வையாளர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்“, என்றார் அவர்.

கிரகணத்தின் போது உணவு சாப்பிடக்கூடாது போன்ற நம்பிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது, அது ஒரு ‘நிழல் நாடகம்’ என்று அவர்கள் சொன்னார்கள்.

“கிரகணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு நிகழ்கின்றன என்பது குறித்து இப்போது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும், கிரகணங்களையும் துல்லியமாக கணிக்க முடிகிறது, எனவே இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நீங்க வேண்டும்” என்று விக்யான் பிரசாரின் மூத்த விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.