உத்தர பிரதேச மாநிலம் மதுரா-வில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இதுகுறித்த ஆதாரத்தை வழங்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

2020 ம் ஆண்டு மே மாதம் ஜாத்வாரி கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் தானியங்கள் ஏற்றிச் சென்ற வண்டியில் இருந்து 386 கிலோ கஞ்சாவையும் அதை கடத்தியதாக மூன்று பேரையும் கைது செய்தது.

அதே போல் மற்றொரு சோதனையில் 195 கிலோ கஞ்சாவை நெடுஞ்சாலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சமீபத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த கஞ்சா அனைத்தையும் எலிகள் தின்று தீர்த்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து எலிகள் தின்றதற்கான ஆதாரத்தை வழங்குமாறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 26 ம் தேதி இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெறும் நிலையில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சந்தை மதிப்பில் சுமார் 65 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கஞ்சா மொத்தத்தையும் சிறு உயிரினமான எலிகள் விழுங்கிவிட்டதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், 2021 ம் ஆண்டு ஏத்தா மாவட்டத்தில் மற்றொரு வழக்கில் 35 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள 1400 பெட்டிகளில் இருந்த மதுவகைகளை எலிகள் குடித்துவிட்டதாக கூறப்பட்டது.