பிப்ரவரி 21 ஆம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் : துவாரகா சங்கராச்சாரியார்

Must read

க்னோ

ரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் என துவாரகை சங்கர மட மடாதிபதி சாமி சொரூபானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து அரசை வலியுறுத்த இந்து இயக்கங்கள் முடிவு எடுத்தன. அரசு தரப்பில் இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்புக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆகவே இதற்காக புதிய சட்டம் இயற்றுவது குறித்து தற்போது நடந்து வரும் கும்ப மேளாவில் இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் ஒன்று கூடி சட்டத்துக்கு விரோதமின்றி ராமர் கோவில் கட்டுவது பற்றி விவாதிக்க உள்ளனர். ஆனால் உடனடியாக ராமர் கோவில் கட்ட வேண்டும் என்னும் குரல் மீண்டும் எழுந்துள்ளது. இம்முறை அந்த குரலை எழுப்பியவர் துவாரகையில் உள்ள சங்கர மட மடாதிபதி சாமி சொரூபானந்த சரஸ்வதி ஆவார்.

ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட நான்கு சங்கர மடங்களில் ஒன்று துவாரகை சங்கர மடம் ஆகும். இந்த மடத்தின் தற்போதைய மடாதிபதி சாமி சொரூபானந்த சரஸ்வதி, “வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது. நாங்கள் நீதிமன்ற உத்தரவை மீறி எதுவும் செய்யவில்லை.

அலகாபாத் உயர்நீதிமன்றம் கோவில் கட்டக்கூடாது என அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆகவே தற்போது கோவில் கட்ட சட்டப்படி தடை இல்லை. இது சட்டத்தை மீறிய செயல் இல்லை. எங்கு ராமர் குழந்தையாக உள்ளாரோ அதுவே அவர் பிறப்பிடமாகும்” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article