டில்லி

வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி தலைவர் சந்தா கோச்சர் வங்கியின் நடத்தை விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபக் கோச்சார் – சந்தா கோச்சார் – வேணுகோபால் தூத்

வீடியோகோன் நிறுவனம் ரூ. 300 கோடிக்கு மேல் ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து கடன் வாங்கியது. அந்த கடனை திருப்பி செலுத்தாததால் சிபிஐ விசாரணை செய்தது.  இதற்காக வங்கியின் அப்போதைய நிர்வாக இயக்குனரும்  நிர்வாகத் தலைவருமான சந்தா கோச்சரின் கணவருக்கு வீடியோகோன் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்று வழங்கப்பட்டதாக தெரிய வந்தது.

இது குறித்து வங்கி தரப்பில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவுகள் நேற்று ஐசிஐசிஐ வங்கி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விசாரணை முடிவில் காணப்படுவதாவது :

* சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் நடத்தை விதிகளை மீறி உள்ளார். அத்துடன் வங்கியின் பொருளாதார நலனுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

* அவர் வங்கியின் பொருளாதார நலனுக்காக ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து தவறி உள்ளார். அத்துடன் கடனை திரும்பப் பெற எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

* இவருடைய நடவடிக்கைகளால் வங்கியின் செயல்பாட்டுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* சந்தா கோச்சார் ராஜினாமா செய்தது என்பது கிட்டத்தட்ட அவரை பதவி நீக்கம் செய்ததற்கு சமமாகும்.

* எனவே கடந்த ஏப்ரல் 2009 முதல் மார்ச் 2018 வரை அவருக்கு அளிக்கபட்ட போனஸ் தொகைகளை வங்கி திரும்பப் பெற வேண்டும்

என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு சந்தா கோச்சார், “வங்கியின் கடன் முடிவுகளை நான் எப்போதும் மாற்றவில்லை. கடனைத் திரும்பப் பெற வங்கியில் ஏற்கனவே நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளை நான் எப்போதும் மாற்றியதில்லை. நான் கடந்த 34 வருடங்களாக ஐசிஐசிஐ வங்கியில் கடுமையாகவும் பொறுப்புடனும் பணி ஆற்றி உள்ளேன். நான் வங்கிக்கு எதிரான எந்த ஒரு முடிவையும் எடுத்தது கிடையாது. வங்கியின் விசாரணை அறிக்கை எனக்கு மன வேதனையை அளிக்கிறது” என அறிக்கை விடுத்துள்ளார்.

வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ ஏற்கனவே சந்தா கோச்சர், அவர் கணவர் தீபக் கோச்சர், வீடியோகோன் நிறுவன தலைவர் வேணுகோபால் மற்றும் 8 பேர் மீது வழக்கு பதிந்துள்ளது தெரிந்ததே.