டில்லி

ள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 101 ராணுவப்பொருட்கள் இறக்குமதிக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நத் சிங் தடை விதித்துள்ளார்.

இந்தியாவில் உள்நாட்டுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.  இதற்கு ஆத்மநிர்பார் பாரத என பெயரிடப்பட்டுள்ளது.   இதை தமிழில் இந்திய சுயச்சார்பு திட்டம் எனக் கூறப்படுகிறது.  இந்த திட்டத்தை ஊக்குவிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

தனது அறிக்கையில் அவர், ”மத்திய பாதுகாப்புத்துறை 101 ராணுவப் பொருட்களின் பட்டியலைத் தயாரித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படும்.  இந்த நடவடிக்கை பாதுகாப்புத் துறையில் சுயச்சார்பு திட்டத்தில் முக்கியமானதாகும்.  இந்த பட்டியலில் தேவையான அளவு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.

இந்திய நாட்டில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை, தயாரிக்க, தற்போதைய மற்றும் எதிர்கால திறன்களைக் கருத்தில் கொண்டு, இறக்குமதிக்குத் தடை செய்ய வேண்டிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதில்  பீரங்கி துப்பாக்கிகள், துப்பாக்கிகள், போக்குவரத்து விமானம், ரேடார் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

 குறிப்பாக பாதுகாப்புத் துறைக்குத் தேவையான இந்தியாவில் தயாரிக்கக்கூடிய முக்கிய பொருட்களும் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கடந்த 2015 முதல் 2020 ஆக., வரை 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 260 திட்டங்களுக்கு முப்படைகள் ஒப்பந்தம் இட்டுள்ளன. அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கும் போது 4 லட்சம் கோடி ரூபாய்க்குப் பொருட்களைப் பெற முடியும்.  இவற்றில், 1,30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், ராணுவம் மற்றும் விமானப்படைக்கும் 1,40,000 கோடி மதிப்பு பொருட்கள் கடற்படைக்கும் ஆகும்.

இப்பொருட்கள் இறக்குமதிக்கான தடை 2020 முதல் 2024 வரை, படிப்படியாக அமல்படுத்தப்படும்.. இந்த நடவடிக்கையின் மூலம், இந்திய ராணுவம் உள்நாட்டு மயமாக்கலின் இலக்கை சிறப்பாக அடைய முடியும்.

அத்துடன் இந்த இறக்குமதி தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் உள்ளவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியாவில் தயாரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.