டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாக பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டர் பதிவிட்டு, சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

கொரோனா தொற்றுக்கு முதலமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பல மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஹரியானாவின் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அமித் ஷாவை சந்தித்துப் பேசியதால், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.

இந் நிலையில் அமித் ஷா குணமடைந்து விட்டார் என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  கூறி இருப்பதாவது: கொரோனா தொற்று ஏற்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தற்போது பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது என்று கூறினார்.

ஆனால், தற்போது அந்த டுவிட் நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந் நிலையில்  அமித்ஷாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யவில்லை , கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டார் என்ற செய்தி தவறானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆகவே, பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டை நீக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.