மும்பை

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தி மரணமடைந்து  விமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய அரசின்  வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியுள்ளோரைத் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் பணியை ஏர் இந்தியா நிறுவனம் செய்து வருகிறது.   கடந்த வெள்ளி இரவு இந்த திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏர் இந்தியாவின் ஐ எக்ஸ் 1344 விமானம் இயக்கப்பட்டது.

இதில் 10 குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் உள்ளிட்ட 90 பேர் பயணம் செய்தனர்.  கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் இருந்து சறுக்கி பள்ளத்தில் விழுந்ததால் கடும் விபத்து ஏற்பட்டது.  இதில் இதுவரை சுமார் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இவர்களில் விமானி தீபக் சாத்தே மற்றும் துணை விமானி அகிலேஷும் அடங்குவர்.

மகாராஷ்டிர மாநில தலைநகர மும்பையின் சண்டிவாலி பகுதியைச் சேர்ந்த விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக போர் விமானங்களை ஓட்டியுள்ளார்.  இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்று பயணிகள் விமானம் செலுத்த வரும் முன்பு போர் விமானியாகச் சிறப்பாக பணியாற்றியவர் ஆவார்.

விமான விபத்தில் உயிர் இழந்த விமானி தீபக் சாத்தேவின் உடல் மும்பை ஏர் இந்திய விமான நிறுவன கட்டிடத்தில் அஞ்சலிக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.  ஏர் இந்தியா ஊழியர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விமானி தீபக் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.