சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில்  சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் 2 நாள் பயணமாக கடந்த நாளாக டெல்லி சென்றிருந்தார்.  இதற்கு முன்பாக டெல்லி பயணத்தின்போது ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுவை சந்தித்தார். இந்த நிலையில், இன்று  காலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலையில்,  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார்.

ஆளுநருடன் சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஆளுனருடன் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவில் வளர்ந்தவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நேர்மை, தமிழர்களின் கடின உழைப்பு, அவர்களின் ஹானஸ்டியை பிடித்திருப்பதாக ஆளுநர் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு தன்னால் முடிந்த அளவுக்கு நல்லது செய்ய தயாராக இருப்பதாக ஆளுநர் என்னிடம் கூறினார். ஆளுநரிடம் அரசியல் பற்றி விவாதித்தேன்; ஆனால் அதை பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்றார்.

அப்போது செய்தியாளர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ரஜினி, அரசியலுக்கு வர விருப்பமில்லை என பதிலளித்தார். அதுபோல ஜிஎஸ்டி குறித்த கேள்விக்கும் பதில் கூற மறுத்து,  ஜிஎஸ்டி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றவர்,  ஆளுநருடன் சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை என்று விளக்கம் அளித்தார்.

ஜெயிலர் படப்பிடிப்பு குறித்த கேள்விக்கு, வரும் 15 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கும்  என்று  கூறினார்.

தமிழக ஆளுநராக ஆளுநர் ஆர்.என். ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடிகர் ரஜினி சந்தித்து பேசியுள்ள அரசியல் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.