டெல்லி:  சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகஅரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. இதை எதிர்த்து தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு வழக்கை விசாரித்த,  தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு  அமர்வு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி  தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும்,  நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த நீதிபதிகள், எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என கண்டறிய இயலும் என்று கூறியதுடன், முறையான அறிக்கை ஒருவாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கில் அடுத்த விசாரணையின்போது, தலைமைச்செயலாளர் நேரில் ஆவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு உத்தரவைகளை நீதிமன்றம் வழங்கியது. ஆனால், அதை தமிழகஅரசு நிறைவேற்றவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஆகஸ்டு 1ந்தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,  நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தவில்லை என்றால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட நேரிடும். சம்மந்தப்பட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஊதியம் பெற அனுமதிக்க முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயர்நீதிமன்ற எச்சரிக்கையை எதிர்த்து தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,   நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தலைமைச்செயலாளர் தப்பித்துள்ளார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு உத்தரவு