அரசியலில் இருந்து ரஜினிகாந்த் ஓட்டம்: அமைச்சர் கடம்பூர் ராஜு, பொன்னார், சீமான், கமல்ஹாசன் கருத்து

Must read

சென்னை: கட்சி தொடங்கி, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக அறிவித்து வந்த ரஜினி, இன்று உடல்நிலையை காரணம் காட்டி, அரசியலுக்கு வர முடியவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  ரஜினியின் அறிவிப்புக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு

ரஜினியின் அரசியல் பின்வாங்கல் குறித்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிப்பதும், தொடங்காமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம். பொதுவாக நடிகர் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதனால் அதிமுகவுக்கு எவ்வித பின்னடைவும் இல்லை என்றும், ரஜினிகாந்த் தேர்தலின்போது யாருக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய சொந்த விருப்பம். அவரைக் கட்டாயப் படுத்த இயலாது என்றும், நண்பர் என்ற முறையில் முதல்வர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன்ராதாகிருஷ்ணன்

‘ரஜினியின் அறிக்கை ஒட்டுமொத்த மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும்கூட ஏற்றுக்கொள்கிறோம். ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் அரசியல் வாழ்க்கை பாழாகிவிடும் என்று எந்த அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ஒட்டுமொத்தமான சிந்தனை உண்டு. அனைத்துக் கட்சிகளிலும் நல்லவர்கள் வரவேண்டும், அவரவர்கள் கட்சியை மிக உன்னதமான நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதனால் புதியவர்கள் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்றோம்.

ரஜினி கலைத்துறையைச் சேர்ந்த நல்ல மனிதர், மனிதாபிமானம் மிக்கவர். நாட்டுப்பற்று மிக்கவர். இத்தனை வருடமாக தமிழ்நாட்டில் நான் நடித்துள்ளேன், அவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அதில் என்ன தவறிருக்க முடியும். இதில் இரண்டாவது கருத்தை ஏன் சொல்லவேண்டும். அதேபோன்று வரவில்லை என்பதற்காக தவறாக விமர்சனம் செய்வது கூடாது’

சீமான்

இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

மயிலாடுதுறையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கமல் பேசுகையில், என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று கூறினார். மேலும் ரஜினி அரசியல் நிலைப்பாடு குறித்து கூறுகையில்,ரஜினி ரசிகர்கள் நிலைதான் எனக்கும்,ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.பிரசார பயணம் முடிந்து ரஜினியை சந்திப்பேன், சந்தித்த பின் உங்களுக்கு நான் சேதி சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article