மேற்குவங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரை தன் பக்கம் இழுத்தும்கூட, தங்கள் கட்சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சாதகம் ஏற்படவில்லை என்று உணர்ந்ததாலோ என்னவோ, இந்த பரபரப்பான நேரத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் செளரவ் கங்குலியை தங்களிடம் இழுத்து, அதன்மூலம் அம்மாநில தேர்தல் களத்தை அதிர வைக்க வேண்டுமென காவிக் கட்சி முடிவு செய்ததாய் தகவல்கள் வெளியாகின.
அதன்படி, கங்குலிக்கு தீவிரமாக வலைவீசப்பட, மனிதர் சிக்குவதாய் இல்லை. ஆனால், விடாமல் அழுத்தம் அதிகரிக்கவே, நெஞ்சுவலியால் மருத்துவமனையில் படுத்தே விட்டார். இப்போது, பாஜகவின் திட்டம் பணால்..!
இப்படித்தான் தமிழ்நாட்டிலும் அவர்களுக்கு நேர்ந்தது. விருப்பமில்லாமலும், உடல்நிலை குறித்த பயத்திலும் இருந்த ரஜினிகாந்தை, குருமூர்த்தி போன்ற கதைக்கு உதவாத நபர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, வற்புறுத்தியும், மிரட்டியும் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடச் செய்து, அதன்மூலம் ஏகப்பட்ட திட்டங்களை வரைந்தனர்.
ஆனால், ஐதராபாத் சென்ற ரஜினிக்கு, உடல்நலக் குறைவு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய ரஜினிகாந்த், பாஜக முகாமைப் பார்த்து ஒரேடியாக பெரிய கும்பிடாக போட்டுவிட்டார். அவ்வளவுதான், தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக பாஜகவின் திட்டத்தில் பெரிய சறுக்கல்..!
மேற்குவங்கத்திலும் தமிழ்நாட்டிலும் நட்சத்திர மாயையை முன்வைத்து, அதன்மூலம் பெரியளவில் சாதித்து விடலாம் என்றெண்ணிய பாஜகவின் நினைப்பில் லோடு கணக்கில் மண் விழுந்துள்ளது.
அவர்களின் மாற்று திட்டங்கள் என்னவென்பது போகப்போக தெரியும்!