ஜெய்ப்பூர்: மாநிலப் பாடத்திட்டத்தில் பின்பற்றப்படும் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில், சாவர்க்கர் பெயருக்கு முன்னால் இடம்பெற்றுள்ள கவுரவப் பட்டமான ‘வீர்’ என்பதை நீக்குவதென முடிவுசெய்துள்ளது ராஜஸ்தான் மாநில அரசு.

கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி அமைக்கப்பட்ட பாடத்திட்ட மறுவரையறை கமிட்டியினுடைய பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பாடத்திட்டம் தொடர்பான முடிவுகள் மாறுகின்றன.

ராஜஸ்தானை ஆளும் அஷோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவுள்ள மாற்றங்களில் மிக முக்கியமானது, இந்துத்துவ சின்னமாக குறிப்பிடப்படும் சாவர்க்கரின் பெயருக்கு முன்னால் இடம்பெறும் ‘வீர்’ என்ற கவுரவ பட்டத்தை நீக்குவது என்பது. ராஜஸ்தானின் மாநிலப் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் சாவர்க்கரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

இப்பாடத்தில், அந்தமான் தீவின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தான் விடுதைலையாக வேண்டி, பிரிட்டிஷ் அரசிற்கு 4 முறை கருணை மனுக்களை தாக்கல் செய்த விபரங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவர் தனது இரண்டாவது கருணை மனுவில் ‘போர்ச்சுகலின் மகன்’ என்று தன்னை அழைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்படுவது குறித்தும் விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டாவது கருணை மனு, கடந்த 1911ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

மேலும், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்றுவது தொடர்பாக சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், ராணுவமயமான ஒரு இந்து தேசத்தை கட்டமைப்பது குறித்த அவரின் கருத்துக்கள் தொடர்பாகவும் இந்தப் பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்துத்துவ தத்துவம், கடந்த 1942ம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை எதிர்த்ததோடு மட்டுமின்றி, கடந்த 1946ம் ஆண்டு பாகிஸ்தான் உருவாக்கத்திற்கான முயற்சியையும் கடுமையாக எதிர்த்தது என்றும் அந்த வரலாற்றுப் பாடத்தில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி கொலை வழக்கில், சாவர்க்கர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், இறுதியில் அவர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசின் இந்த முடிவு, பல்வேறான இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து கடும் எதிர்ப்புகளை சம்பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கும், இந்துத்துவ சின்னமான சாவர்க்கருக்கும்(அவர் இறந்த பின்னரும்) கடந்த காலங்களில் மோதல்கள் வந்துள்ளன என்பதையும் மறக்கலாகாது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர ஐயர், சாவர்க்கரை மிகவும் மோசமாக விமர்சித்து, இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாரதீய ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.