ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாணவ மாணவிகளை ஒரு கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல அந்த மாவட்ட கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த கண்காட்சியில் முஸ்லிம் அல்லாத ஆண், பெண்களை விரும்ப சொல்லும் ‘‘லவ் ஜிகாத்’’ பற்றி அறிந்து கொள்ளவும், கிறிஸ்தவர்கள் சதி திட்டங்கள் தொடர்பான புத்தகங்களை வாங்கவும், பசுவை தேசிய தாயாக அறிவிக்க வலியுறுத்தும் வகையில் இந்த கண்காட்சியில் பங்கேற்க அறிவுரை வழங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை ஆரம்பம் மற்றும் இடைநிலை கல்வி அமைச்சர் வாசுதேவ் தேனானி உத்தரவின் பேரில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்து ஆன்மீக மற்றும் சேவை அமைப்பு இது தொடர்பாக பள்ளிகளை தொடர்பு கொண்டு வருகின்றன. எனினும் அரசு உத்தரவு வரும் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று அரசுப் பள்ளிகள் அறிவித்துள்ளன.

இந்த தகவலை ஜெய்ப்பூர் மாவட்ட கூடுதல் கல்வி அலுவலர் தீபக் சுக்லா உறுதி செய்துள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் இந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கு உதவி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக இந்த கண்காட்சியில் பங்கேற்க அவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியில் 2 ஆயிரத்து 100 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலிறுத்தப்படுகிறது. அதனால் ஒரு பள்ளிக்கு 2 முதல் 3 ஆசிரியர்கள் வரை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 5 நாட்கள் கொண்ட இந்த கண்காட்சி ஜெய்ப்பூரில் 3வது முறையாக நடக்கிறது.

இந்த கண்காட்சியில் விஹெச்பி சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் ‘லவ் ஜிகாத்’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. முழுக்க முழுக்க இந்து அமைப்புகள் மூலம் இந்த கண்காட்சியில் மாணவ மாணவிகளை பங்கேற்கச் செய்வதற்கு பெற்றோர் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.