டில்லி:

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக.வில் பிளவு ஏற்பட்டது. இதில் பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசின் ஆதரவு இருந்து வருகிறது.

இதனால் அவர் அடிக்கடி டில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து வந்தார். இதனால் மத்திய அரசின் ஆலோசனைப்படியே பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாக தமிழக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் எடப்பாடி அணியினரும், பன்னீர்செல்வம் அணியினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுவும் மத்திய அரசின் ஆலோசனைப்படி தான் நடந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 12ம் தேதி பிரதமர் மோடியை பன்னீர்செல்வம் டில்லியில் சந்தித்து பேசினார். இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பன்னீர்செல்வம் பாஜக.வில் இணைகிறார் என்ற பேச்சும் அப்போது அடிபட்டது. மோடியை சந்தித்துவிட்டு வெளியே வந்த பன்னீர்செல்வம், ‘‘தமிழகத்திற்கு நிலக்கரி கோரி பிரதமரை சந்தித்தேன். அதற்கான கோரிக்கை மனுவை கொடுத்துள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

வழக்கமாக சொந்த காரணங்களுக்காக பிரதமர் மோடியை சந்திப்பவர்கள் இதுபோன்று பொது விஷயங்களுக்காக சந்தித்தாக கருத்து தெரிவிப்பது வழக்கமான விஷயம். இந்நிலையில் கடந்த அக்டோபர் 12ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்த பன்னீர்செல்வம் எவ்வித கோரிக்கை மனுவையும் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவுக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.