ராஜா முத்தையா கல்லூரியில் பல மடங்கு கட்டணம்! குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,

சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும், அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்  என்று மாணவர்கள் கடந்த மாதம் 29ந்தேதி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் ஒருவாரம் கடந்துள்ள நிலையில் அரசு சார்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில, சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கப்படும் பல மடங்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரியை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும்  பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

“சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அரசுக் கல்லூரிகளாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

தமிழக அரசின் இந்தத் திட்டம் சரியானது என்பதில் ஐயமில்லை. ஆனால், நிர்வாக மாற்றம் மட்டுமன்றி, கட்டண மாற்றமும் செய்தால்தான் இந்நடவடிக்கை பயனுள்ளதாக அமையும்.

பா.ம.க முன்வைத்த யோசனைப்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்ட போதிலும், அதன் முழுமையான பயன்கள் இன்னும் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை.

பல்கலைக்கழகத்தின் அங்கமாகத் திகழும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவை பெயரளவில் அரசுடைமையாக்கப்பட்டாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியாரின் கைகளில் இருந்தபோது வசூலிக்கப்பட்ட கட்டணம்தான் தொடர்ந்து வசூலிக்கப்பட்டுவருகிறது. மாணவர்களின் நலனுக்கு எதிரான இக்கட்டண முறையை நீக்கிவிட்டு, அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாறுவது மாணவர்களுக்கு பல வழிகளில் வசதியாக இருக்கும்.

அதேநேரத்தில் இந்த நடவடிக்கையால் இக்கல்லூரி மாணவர்களுக்கு கட்டணக் குறைப்பு இருக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் வினா. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை நேரடியாக தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருவதன் நோக்கமே அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக இந்த இரு கல்லூரிகளின் கல்விக் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என்பதுதாம்.

ஆனால், இந்த இரு கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டி லிருந்து பிரிக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிடுவதன் நோக்கம் வேறு ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக செலவுகள் அதிகரித்துவிட்ட நிலையில் ஆண்டுக்கு ரூ.250 கோடி பற்றாக்குறை ஏற்படும் நிலையில், மருத்துவக் கல்லூரிகளை தனியாக பிரித்துவிட்டால் பல்கலைக்கழக செலவுகளில் ஆண்டுக்கு ரூ.80 கோடி குறையும் என்பதற்காகவே அரசு இவ்வாறு செய்ய நினைக்கிறது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியையும், பல் மருத்துவக் கல்லூரியையும் நிர்வாக மாற்றம் செய்வதுடன் தமிழக அரசு நிறுத்திக் கொண்டால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது.

கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான் மாணவர்களின் முக்கியக் கோரிக்கை ஆகும். தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக அரசு கல்லூரிகளில் 13,600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.5 லட்சத்து 54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், இளநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு, முதுநிலை மருத்து வப் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே ரூ.11,600, ரூ. 42,025, ரூ.31,325 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இப்படிப்புகளுக்கு முறையே ரூ.3.40 லட்சம், ரூ.9.80 லட்சம், ரூ.8 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஒரே அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் மருத்துவக் கல்லூரிகளில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது முறையல்ல. இதை எந்த வகையிலும் அரசு நியாயப்படுத்த முடியாது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி கட்டணத்தைக் குறைப்பது ஒன்றும் சாத்தியமில்லாத விஷயமல்ல. இந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டவையாக பார்க்காமல் கடலூர் மாவட்டத்துக்காக புதிதாக அமைக்கப்பட்டவையாக நினைத்து அவற்றுக்கான தொடர் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கினால் போதுமானது.

இதற்கு முன் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்துக்குச் (இ.எஸ்.ஐ) சொந்தமான இரு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 12.3.2015 அன்று அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் எழுதியக் கடிதத்தில் அக்கல்லூரிகளின் தொடர் செலவினங்களை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கூறியிருந்தார்.

அதே விதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும். எனவே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக வரம்புக்குள் கொண்டு வரும்போது, அவற்றின் கட்டணங்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் அளவுக்கு குறைக்க வேண்டும்” என்று  டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Raja Muthaiah Medical College has toomuch fees! PMK Leader Ramadoss's assertion to reduce