சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை “உறியடித்த” ராஜ்தாக்கரே

Must read

மும்பை:  உறியடி விழாவில் இருபது அடிக்கு மேல் மனித பிரமிடின் உயரம் இருக்கக்கூடாது  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிவசேனா தலைவர் ராஜ் தாக்கரே, 49 அடி உயர மனித பிரமிடுடன் உறியடி விழாவை விமர்சையாகக் கொண்டாடினார்.

ராஜ்தாக்ரே
ராஜ்தாக்ரே

ஜென்மாஷ்டமி விழாவையொட்டி உறியடி திருவிழா வட மாநிலங்களில் விமரிசையாக நடக்கும். இந்நிகழ்ச்சியில் மனித பிரமிடுகள் அமைத்து உறியை அடிப்பார்கள். இது நாற்பது ஐம்பது அடி உயரம் இருக்கும்.
இந்த மனித பிரமிடின் உயரம் இருபது அடியை தாண்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும்,  18 வயதுக்குட்பட்டவர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஜெய் ஜவான் கிரிடா மண்டல் கோவிந்தா பதக் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.  அதில், “மகாராஷ்டிராவில் உறியடிக்க அமைக்கப்படும் மனித பிரமிடின் உயரத்தை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைக்கு மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன” என்று அதில் தெரிவித்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை நிராகரித்தது. மேலும்,  மனித பிரமிடின் உயரத்தை அதிகரித்து ஒலிம்பிக்கில் என்ன தங்கப் பதக்கமா வாங்க முயற்சிக்கிறீர்கள்.. இருபது அடிக்கு மேல் மனித பிரமிடின் உயரம் இருக்கக்கூடாது” என்று மீண்டும் வலியுறுத்தியது.
Untitled
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சிவசேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கடுமையாக விமர்சித்தார். “பாரம்பரியமான விழாவில் நீதிமன்றம் தலையிடுவது தவறு.  உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அதிக உயரத்தில் மனித பிரமிடு அமைத்து உறியடி திருவிழாவை கொண்டாடுவோம்” என்று அறிவித்தார்.
அதே போல இன்று தானே பகுதியில் ராஜ்தாக்கரே சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள,  49 அடி உயர மனித பிரமிடு அமைத்து உறியடி திருவிழா கொண்டாடப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உறியடி வீரர்கள் கறுப்புக்கொடி அணிந்து உறியடி விழாவில் கலந்துகொண்டார்கள்.
janmashtami345511-24-1472028606
சிவசேனாவும் பங்குபெற்றுள்ள மகராஷ்டிர மாநில அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நடைபெறும் இந்த உறியடி விழாக்களை கண்டுகொள்ளவில்லை.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தபோது, தமிழகத்தின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்ததும், அதற்கு காவல்துறை தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article