நெல்லை

தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 

தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதி கனமழை பெய்தது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.  இங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. ஆயினும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மழை ஓய்ந்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. எனவே நெல்லை, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளது. இந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.