இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து உரிய நேரத்தில் சரியான எச்சரிக்கை வழங்கப்படாததே தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்கு காரணம் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அதிகனமழை காரணமாக அம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் துறைமுக நகரமான தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சரக்கு லாரிகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தவிர ஆற்று நீரில் ரயில்வே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சென்னை செல்ல வேண்டிய திருச்செந்தூர் ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிக்கொண்டது.

இந்த ரயிலில் பயணம் செய்த 800 பேரின் நிலை அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் தண்டவாளம் போல் கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னையை சீர்குலைத்த மிக்ஜாம் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 ரயில்களை ரத்து செய்த ரயில்வே நிர்வாகம் இம்முறை அதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் உரிய நேரத்தில் இந்த பகுதிக்கு ரெட் அலர்ட் விடாததே காரணம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதோடு சென்னை எண்ணூர் கடலில் எண்ணெய் படலம் படிந்திருப்பது குறித்தும் மத்திய அரசோ தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமோ கவனத்தில் கொள்ளவில்லை, அதேவேளையில் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நேரடியாகச் சென்று வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளுடன் பணிகளை முடுக்கிவிட்ட தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன இயக்குனர் தமிழகம் குறித்தும் ரயில் பயணிகளை மீட்பது தொடர்பாகவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.