சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு செய்தார். எழும்பூர், கொளத்தூர் , திரு.வி.க.நகர், பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. ஏற்கனவே பெய்த கடும் மழையால்,  சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதை ஆய்வு செய்த முதல்வர், அதை சீரமைக்கும் பணிகளை முடுக்கி விட்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவரது தொகுதியான கொளத்தூர் உள்பட பல பகுதிகளில் மீண்டும் ஆய்வு நடத்தினார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கள்,  தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைள் குறித்து இன்று, கொளத்தூர், திரு.வி.க.நகர், எழும்பூர், சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட க்ரே நகர், அசோகா அவன்யூ, ஜி.கே.எம், காலனி, 70அடி சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஸ்டீவன்சன் சாலையில் நடைபெற்று வரும் பால வேலைகளை பார்வையிட்ட முதலமைச்சர், பெரவலூர் காவல் நிலையம் அருகில் குளம் போல் தேங்கியிருந்த வெள்ள நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு,  சேகர்பாபு, எம்.பி. தயாநிதி மாறன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.