டில்லி,

ர்நாடக அமைச்சர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அறையில் சோதனை நடைபெற வில்லை என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தி வருகிறது பாரதியஜனதா. இதன் காரணமாக அணிமாறி ஓட்டளிக்காமல் இருக்க குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு அழைத்து வரப்பட்டு அங்குள்ள ஈகிள் கார்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு  இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கர்நாடக அமைச்சர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 39 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. காங் ., எம்.எல்.ஏ.,க்கள் தங்கி இருந்த அறைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது அராஜகம் என்றும், குஜராத் ராஜ்யசபா தேர்தல் காரணமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும்,  அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காங்கிரசார் சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறி   ராஜ்யசபாவில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

கர்நாடக அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கும் காங்., உறுப்பி னர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து  லோக்சபாவில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, எந்த காங்., எம்.எல்.ஏ., தங்கியிருந்த அறையிலோ அல்லது எந்த ரிசார்ட்டிலோ வருமான வரித்துறை சோதனை நடத்தப்படவில்லை. அப்படியே நடத்தப்பட்டிருந்தாலும், காங்., எம்.எல்.ஏ.,க்களின் அறை ஒன்றும் சோதனைக்கு அப்பாற்பட்ட பகுதி கிடையாது. மேலும் அங்குள்ள கர்நாடக அமைச்சரின் அறை மட்டுமே சோதனை நடத்தப்பட்டதாகவும்,

கர்நாடக அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்துள்ளார்.