டில்லி:

முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி திடீரென வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு ஆசிய நாடு ஒன்றுக்கு அவர்  புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ராகுல் திடீரென வெளிநாடு பறந்துள்ளது ஊடகங்களில் பலவாறு விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ராகுல் கம்போடியா சென்றுள்ளதாக சிலரும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சென்றிருப்பதாக சிலரும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து,   கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி  “ஒரு தனிப்பட்ட நபரின் தனிப்பட்ட விவகாரத்தை, பொது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தக் கூடாது’ என்று  தெரிவித்து உள்ளார்.

வரும் 11-ம் தேதிக்குள் அவர் நாடு திரும்புவார் என்றும்,  பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள 3-வது வெளிநாடு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.