ராய்ப்பூர்

ரும் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் அரசு அமைக்க உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டுகிறார்.

டில்லி  இந்தியா கேட் பகுதியில் வங்கதேச போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக இந்திரா காந்தியால் அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது.  தொடர்ந்து 50 ஆண்டுகளாக எரிந்து வந்த இந்த ஜோதி தற்போது அணைக்கப்பட்டுப் போர் நினைவிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.  இது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

நேற்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தனது டிவிட்டரில், “பல தலைமுறைகளுக்கு இந்திய வீரர்கள் போரில் மரணம் அடைந்த  தியாக வரலாறுகள் உத்வேகம் அளித்து வருகிறது.  ஆனால் நாட்டுக்காகப் போரிடாதோருக்கு இது பற்றி எதுவும் தெரியாது.

சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அமர் ஜவான் ஜோதி அமைக்கப்பட உள்ளது.  வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைய உள்ள இந்த அமர் ஜவான் ஜோதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டுவார்” என அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் அரசு நிலமற்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளது.  இதன்படி 45 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட உள்ளது.  இதற்காக அம்மாநில அரசு நிதி நிலை அறிக்கையில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  பிப்ரவரி 3 அன்று ராகுல் காந்தி இந்த திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.