டோதரா

பா ஜ க வின் 2014 தேர்தல் வெற்றி தனது கண்களை திறந்து உண்மையை உணர வைத்ததாக ராகுல் காந்தி கூறி உள்ளார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது குஜராத் சுற்றுப்பயணத்தில் வடோதராவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.  அப்போது அவர் குஜராத்தை ஆளும் பா ஜ க அரசின் மேல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.   ஒரு சில தொழிலதிபர்களை மட்டுமே வளர்த்து விட்டு பெரும்பான்மையான மக்களுக்கு இடர் விளைவித்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “பா ஜ க எனக்கு பெருமளவில் உதவி உள்ளது.   2014ல் காங்கிரஸ் தோற்று பா ஜ க வெற்றி அடைந்தது எனக்கு அதிர்ச்சியாக அப்போது இருந்தாலும், அந்த நிகழ்ச்சி எனது கண்களை திறந்துள்ளது.   எனக்கு ஒரு மாபெரும் உண்மையை உணர வைத்துள்ள்ளது.    காங்கிரஸ் கூட்டணி ஆட்சியானது தற்போதைய ஆட்சியை விட பன்மடங்கு நன்றாக இருந்தாலும் நாங்கள் தோல்வி அடைந்தோம்.   தற்போதைய அரசு ஒரு நாளைக்கு சுமார் 450 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.  ஆனால் ஒரு நாளைக்கு 30000 இளைஞர்கள் வேலையின்றி வாடுகின்றனர்.   இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்காவது தினமும் 30000 முதல் 40000 வரை வேலை வாய்ப்பு அளிக்காவிடில் இளைஞர்களிடையே அது கடும் கொந்தளிப்பை உண்டாக்கும்.

காங்கிரஸ் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கங்களை முன்பு ஊக்குவிக்காமல் விட்டுவிட்டது.  அது மிகவும் தவறாகும்.  தற்போது அதே தவறைத்தான் பா ஜ க அரசும் செய்து வருகிறது.   எங்களை எந்த குற்றச்சாட்டுடன் அனுப்பி வைத்தார்களோ, அதே குற்றத்தை அவர்கள் செய்து வருகின்றனர்.   ஒரு தலைவர் என்பவர் உடனடியான நிவாரணங்களை விட 5-10 வருடங்களுக்கு தேவையான நிவாரணங்களை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

எனக்கு தனிப்பட்ட முறையில் பா ஜ க மேல் எந்த வெறுப்பும் இல்லை.   எனது குடும்பம் காந்திய வழியில் வந்தது.   எனது தந்தையை கொன்ற பிரபாகரனின் சடலத்தைக் கண்ட போது நான் துயருற்றேன்.  அதே நிலைமையில் எனது சகோதரி பிரியங்காவும் இருந்ததாக கூறினார்.  ஆனால் பா ஜ க எங்களின் குடும்பத்தை வெறுக்கிறது.  இது ஆரோக்கியமன அரசியல் அல்ல,” எனக் கூறினார்.

காங்கிரஸை இந்துக்களுக்கு எதிரான கட்சி என குஜராத் பா ஜ க கூறி வரும் வேளையில் தனது சுற்றுப்பயணத்தில் குஜராத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று ராகுல் காந்தி பிரார்த்தனை செய்தது குறிப்பிடத் தக்கது.