தமிழகத்தில் இம்மாதம் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தேர்தல் பிராச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவை திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
அப்போது கிராமத்து சமையல் (Village Cooking Channel) என்ற யூடியூப் சேனலை வழங்கிவரும் இளைஞர்களுடன் சமையல் செய்த ராகுல் காந்தியின் வீடியோ நேற்று வெளியாகி வைரலானது.
‘பொட்டல் காட்டில்’ மஸ்ரூம் பிரியாணி சமைத்த ஒரு வயதானவர் மற்றும் நான்கு இளைஞர்கள் கொண்ட குழு, சமைத்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ராகுல் காந்தி தான் அவர்களுக்கு உதவி செய்வதாக கூறினார்.
அதனை தொடர்ந்து அவர் பிரியாணிக்கான தயிர் பச்சடி கலந்தார், அப்போது அவர் ‘தயிர்’ என்று திருத்தமாக உச்சரித்தது அவர்களுக்கு உற்சாகமளிப்பதாக இருந்தது.
சமையல் முடிந்ததும் அவர்களுடன் தரையில் ஈச்சம் பாய் விரித்து அமர்ந்து மஸ்ரூம் பிரியாணியை சுவைத்து சாப்பிட்டதுடன் நன்றாக இருந்ததாக கூறினார்.
இந்த வீடியோ நேற்று கிராமத்து சமையல் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றியதிலிருந்து வைரலாகி வருகிறது. ராகுலின் இந்த நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் ஜோதிமணி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.