டில்லி

டில்லியின் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை உள்ளூர் மக்கள் போல வந்து பாஜகவினர் மிரட்டி உள்ளனர்.

டில்லியில் சுமார் 65 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் ஒரு முடிவு எட்டப்படாததால் விவசாயிகள் குடியரசு தினத்தன்று ஒரு டிராக்டர் பேரணியை நடத்தினர்.   அப்போது அதில் ஒரு சில விஷமிகள்  புகுந்து கலவரம் செய்து செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்த போதும் மத்திய அரசு விவசாயிகள் தங்கி உள்ள எல்லைப் பகுதிகளை மூடி உள்ளனர்.  சிங்கு எல்லையில் உள்ளூர் மக்கள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் வந்து அங்குள்ள விவசாயிகளின் கூடாரங்களைச் சூறையாடி விவசாயிகளை காலி செய்யுமாறு மிரட்டி உள்ளனர்.  மேலும் இந்திய தேசியக் கொடியை விவசாயிகள் அவமதித்ததாகவும் குரல் எழுப்பினர்.

உள்ளூர் மக்கள் எனப் பல செய்தி ஊடகங்கள் சொல்லும் இந்த கும்பல் பலர் தேசியக் கொடியுடன் வந்து விவசாயிகளை மிரட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.  இந்த கூட்டத்தில் ஒருவர் நீல வெள்ளை மற்றும் பச்சை கோடுகள் அணிந்த சட்டையுடன் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி காணப்படுகிறார்.  கும்பலில் முதல் வரிசையில் உள்ள இவரை சில சமூக வலை தள பயன்பாட்டாளர்கள் அமன் தபாஸ் என அடையாளம் காட்டி உள்ளனர்.

 

அமன் தபாஸ் என்பவர் வடகிழக்கு டில்லியில் சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளும் நபர் ஆவார். இவருடைய முகநூல் பக்கத்தில் தம்மை அமன்குமார் சமூக தொண்டர் எனக் கூறிக் கொண்டுள்ளார்.  தபாஸ் என்பது ஜாட் இனத்தின் ஒரு பிரிவின் பெயர் ஆகும்.  சென்ற வருடம் இவர் வீட்டுக்கு வீடு கிருமி நாசினி தெளித்த படங்களை வெளியிட்டிருந்தார்.  அமன் மனைவி அஞ்சு தேவி என்பவர் உள்ளூர் பாஜக தலைவரும் மாநகராட்சி உறுப்பினரும் ஆவார்.

அமன் பல பாஜக கூட்டங்களிலும் பங்கு  பெற்றுள்ளார்.  இவரும் அஞ்சு தேவியும் 2017 ஆம் வருடம் பாஜகவில் இணைந்துள்ளனர்.  அதற்கு முன்பு இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்துள்ளனர்.  சமீபத்தில் அமன் தாம் அமித்ஷாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  சிங்கு எல்லையில் இருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் உள்ள பூத் குர்த் என்னும் பகுதியில் வசிப்பதாகஅஞ்சு தேவி சொல்லி உள்ளார்.

சிங்கு எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக அமன் விவசாயிகளை காலி செய்யச் சொல்லி உள்ளார்.   உண்மையில் சிங்கு எல்லையின் போக்குவரத்து தடையால் பூத் குர்த் எவ்விதத்திலும் பாதிக்காது எனபதே உண்மையாகும்.  ஏனென்றால் பூத் குர்த் 15 கிமீ தள்ளி இருபதுடன் அந்த பகுதியை அடைய சிங்கு எல்லை வழியாகச் செல்ல வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டத்தில் தென்பட்ட மற்றொரு பாஜக தொண்டரான கிஷன் தபாஸ் என்பவர் சிங்கு எல்லையில் நடந்த நிகழ்வு குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில் அவர் தம்மை சிங்கு பார்டரில் வசிக்கும் உள்ளூர் மக்களில் ஒருவராகச் சொல்லிக் கொண்டுள்ளார்.  அவர் அந்த போராட்டத்தில் எல்லையை காலி செய் எனக் கோஷமிடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவில் அவருடன் அமன் தபாஸ் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.   மற்றொரு வீடியோவிலும் அமன் மற்றும் கிஷன் ஆகிய இருவரும் ஒன்றாக உள்ளனர்.

கிஷன் கடந்த வருடம் அமன் மனைவியுடன் பூல் குர்த் பாஜக அலுவலகத்தில் தாம் உள்ள புகைப்படத்தை வெளியிட்டதுடன் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என உள்ளூர் வாசியான தாம் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் வெளியூர் பாஜக தொண்டர்கள் பலர் இந்த சிங்கு எல்லையில் உள்ளூர் மக்கள் என்னும் பெயரில் கூடி உள்ளதும் அவர்கள் விவசாயிகளை மிரட்டுவதும் தெரிய வந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.,