சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்  அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்து உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக,  சென்னை காசிமேட்டில் மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த படகுகள் கடும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், புயல் காரணமாக பாதிக்கப்படைந்துள்ள  படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

சென்னை காசிமேட்டில் புயல் காற்றால் 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் சில படகுகள் கடல் நீரில் மூழ்கிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.  மீனவர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்ற அமைச்சர், கட்டுமரங்கள் முழுமையாக சேதமடைந்திருந்தால் ரூ.32 ஆயிரம் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்திருந்தால் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

அதுபோல ஃபைபர் படகுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் அவற்றிற்கு ரூ.75 ஆயிரம் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்திருந்தால் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இதுபோல் இயந்திரப் படகுகளுக்கு சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேத விவரங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து 2, 3 நாட்களில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.