டெல்லி: மருந்துகள் போலியானதா என்பதை கண்டறியும் வகையில் மருந்து அட்டைகளின் மீது QR Code பதிவிடும் முறை அறிமுகமாக உள்ளது. முதற்கட்டமாக, 300 மருந்து நிறுவனங்களின் முக்கிய மருந்துகளில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

நமது நாட்டில் ‘போலி’களுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. போலி செய்தியாகட்டும், போலி நோட்டு (கள்ள நோட்டு) களாகட்டும் நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறது. அதுபோல உயிர்காக்கும் மருந்துகளிலும் போலிகள் நடமாடுகிறது. மேலும் ஆன்லைன் மருந்தகமும் அதிகரித்து வருகின்றன.  இதன் காரணமாக போலியான மருந்துகளால் மக்கள் தினமும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக,  போலி மருந்துகளை கட்டுப்படுத்த கியூஆர் கோடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி மருந்து அட்டைகளில் கியூஆர்கோடு பதிவிடப்படும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.  இதன்மூலம் 10 வினாடிகளில் மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.  தாங்கள் வாங்கும் மருந்தின் உண்மைத்தன்மையை எளிதாக சரிபார்க்கலாம்.

இதற்கான உத்தரவை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  அதன்படி, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஆக்டிவ் மருந்து மூலப்பொருள்-ஏபிஐகளில் QR குறியீட்டை வைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் கீழ், மருந்து விலை நிர்ணய ஆணையம் (Drug Pricing Authority DPA) 300 மருந்துகளுக்கு கியூஆர் குறியீடு இடப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மருந்துகளின் விற்பனை மற்றும் விலையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. இதனுடன், மருந்துகளை பதுக்கி வைக்கும் கருப்பு சந்தைப்படுத்துதலும் தடுக்கப்படும். இந்த பட்டியலில் வலி நிவாரணிகள், வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கருத்தடை மருந்துகள்  ஆகியவை அடங்கும்.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தில், பிரபலமான மருந்துகளான, டோலோ (Dolo), சாரிடான் (Saridon), ஃபேபிஃப்ளூ (Fabiflu), ஈகோஸ்ப்ரின் (Ecosprin), லிம்சீ (Limcee), சுமோ (Sumo), கால்போல் (Calpol), கோரெக்ஸ் சிரப் (Corex syrup) அன்வாண்டட் 72  (Unwanted 72) மற்றும் தைரோனார்ம் (Thyronorm) போன்ற பெரிய பிராண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், முக்கிய சிரப்புகள் உள்பட 300 மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளுக்கு கியூஆர் கோடு முறை  கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.