டெல்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, நிதி ஆதாரங்கள் குறித்த அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படும், இலவசங்களுக்கு  நிதி யளிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய விவரங்களை வழங்குவதற்கான ஒரு புரோஃபார்மாவைச் சேர்க்க,  வழிகாட்டுதல்களை திருத்த இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிகிறது. அதன்படி,  நடத்தை வழிகாட்டுதல்களின் மாதிரி குறியீடு உத்தேச திருத்தம் தொடர்பாக அக்டோபர் 19க்குள் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

 ‘தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள்  மக்களை ஏமாற்றும் வகையில் வெளியிடும் இலவசங்கள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.  தேர்தல்களின்போது ஓட்டுகளைப் பெற அரசு பணத்தில் இருந்து இலவச பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இதை தடுத்து நிறுத்தக் கோரியும், அவ்வாறு இலவச அறிவிப்பு வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வந்தது.  அரசியல் கட்சிகள் சார்பில் வாதாடிய  மூத்த வழக்கறிஞர்,  கபில் சிபல் கூறும்போது,  இந்த விவகாரத்தில் நிதி கமிஷன் தான் தலையிட முடியும். மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கும்போது, அந்த மாநிலத்தின் மொத்தக் கடன் எவ்வளவு, எந்தளவுக்கு இலவசப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து நிதி கமிஷன் கேள்வி கேட்க முடியும் என கூறியிருந்தார்.

ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து கேள்வி எழுப்ப தங்களுக்கு அதிகாரம் இல்லை என்ற கூறியது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியதை கடுமையாக சாடியதுடன், இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும, இதுதொடர்பாக  நிதி கமிஷனின் கருத்தை கேட்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு பதிலளிக்க  உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள், அதற்கான நிதி தாக்கங்கள், மற்றும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகள், வழிமுறைகள் குறித்த ஒரு புரோஃபார்மாவை  தேர்தல் வழிகாட்டுதல்களில் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களை  அக்டோபர் 19க்குள் அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.