சண்டிகர்: விவசாயிகளின் போராட்டம் தேவையற்றது  மற்றும் விரும்பத்தகாதது என்று கூறியுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விசவசாயி களுடன்  பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார். மேலும், பஞ்சாபில் நிலத்தடி நீர் குறைந்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில்,  மாநில அரசின் முயற்சிகளில் விவசாயிகள் சங்கங்களும் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் ஜூன் 18 வரை நெல் விதைக்கும் பணிகளில் இறங்க வேண்டாம் என்று பஞ்சாப் அரசு கேட்டுக்கொண்டிள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்து பஞ்சாப் விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோதுமை பயிருக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும், ஜூன் 10 முதல் நெல் விதைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என  கோரி அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகள்  தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் சண்டிகருக்கு ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர். ஆனால், காவல்துறையினர் அவர்கள் தலைநகருக்குள் புக முடியாதபடி தடுத்து நிறுத்தினர். விவசாயிகள்  ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டதால்சண்டிகர் – மொஹாலி எல்லையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமற்றது, விரும்பத்தகாதது என்றும், மாநிலத்தில் நிலத்தடி நீர் குறைந்துவருவதைத் தடுக்க தனது அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் விவசாயி களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மேலும் விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக  பேச்சுவார்த்தைக்காகக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று கூறிய அவர், நிலத்தடி நீர் குறைந்திருப்பதைத் தடுப்பதில் அரசு கொண்டிருக்கும் உறுதியை வெற்று முழக்கங்களால் முறியடிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

“தர்ணா போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. அரசிடம் தங்கள் குறைகளை அவர்கள் முறைப்படி தெரிவிக்க வேண்டும்” என்றவர், நெல் விதைப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது விவசாயிகளின் நலனுக்கு எதிரானதல்ல என்றும், அவ்வாறு செய்வது நிலத்தடி நீரைப் பாதுகாக்க உதவும் என்றும் சுட்டிக்காட்டினார். “நானும் ஒரு விவசாயியின் மகன்தான். இவ்விஷயத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். ஜூன் 10-ம் தேதிக்கும் 18-ம் தேதிக்கும் இடையில் என்ன வித்தியாசம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதைத் தடுக்கவும் நான் நடவடிக்கை எடுப்பது தவறா என சம்பந்தப்பட்ட விவசாய சங்கங்களிடம் கேட்க விரும்புகிறேன்” என்று கூறிய பகவந்த் மான், “விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது எனக்கு ஆதரவளிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படும் எல்லா இழப்புகளுக்கும் நான் இழப்பீடு வழங்குவேன்” என்றும் உறுதியளித்தார்.