புதுச்சேரி: என்ஆர் காங்கிரஸ் பாஜக அதிகாரச்சண்டையால், மாநில அரசு ஸ்தம்பித்து போய், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. அங்கு பாஜக என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தாலும், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு,துணைமுதல்வர் பதவி போன்றவற்றால் இரு கட்சிகளுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையில் கடந்தா மே மாதம் 7ந்தேதி மாநில முதல்வராக என்.ஆர்.ரங்கசாமி மட்டுமே பதவி ஏற்றார். ஆனால், ஒரு மாதத்தை கடந்த நிலையில் இன்னும் அமைச்சர்கள் பதவி ஏற்காக சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை  கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த காலகட்டத்தில் மத்திய அரசு கடந்த 40 நாளில் 21 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ எட்டியுள்ளது. இதைப்பற்றி எந்த அக்கறையும் ஆளும் மத்திய பாஜக அரசுக்கு இல்லை என்று கூறினார்.

மேலும் மாநில சட்டமன்ற  தேர்தல் முடிவுகள் வெளியாகி 40 நாட்கள் கடந்தும், இதுவரை  அமைச்சரவை பதவியேற்கவில்லை. இதுதான் ரங்கசாமியின் லட்சணம். மாநிலத்தில், யார் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. அனைத்து துறைகளையும் முதல்வர் ரங்கசாமியே கையில் வைத்துள்ளார். இதனால் மாநிலத்தில் அரசு துறைகள் ஸ்தம்பித்து உள்ளன. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். கொரோனா தொற்றால் ஏராளமானோர் மடிந்து வருகின்றனர்.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்று சாடியவர், மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது, அதிகாரப் போட்டி நடக்கிறது, பாஜகவுக்கு துணை முதல்வர், 2 அமைச்சர்கள் வேண்டும் என சண்டை நடக்கிறது. இவர்களின் அதிகார சண்டையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நிர்வாகம் ஸ்தம்பித்து சீர்கெட்டுள்ளது.” என்று குற்றம் சாட்டினார்.