சென்னை: சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரிய வில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது, பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர் கொடுத்த ஊழல் புகாரின் பேரில்,  சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகக் கூறி பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவரும், அந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தங்களை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக சில ஊழியர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், ஜெகநாதனை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, அவரை உடனே ஜாமினில் விடுதலை செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், ஜெகநாதன்மீதான ஜாமினை ரத்து செய்ய கோரி, காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் தன்மீதான  வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

முன்னதாக, இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தபோது, இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, காவல்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, துணைவேந்தர் ஜெகநாதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஓய்வுபெற்ற பின் லாபமடையும் நோக்கில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2013ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, லாப நோக்கில்லாமல், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்தை துவங்கவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவும் அரசும் அனுமதியளித்துள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும்,  பல்கலைக்கழகத்துக்கும், மாணவர்களுக்கும் மட்டும் பயன் தரக் கூடிய இதுபோன்ற நிறுவனம், பல்வேறு மாநில பல்கலைக்கழகங் களில் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் லாப நோக்கு இல்லா நிறுவனம் என்பதால் ஊழல் எங்கு நடைபெற்றது என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி: அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இதுவரை நடத்திய விசாரணையில் என்ன தெரிய வந்தது” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுத்தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் பதிலளித்தபோது, “தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களில் 2013ல் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த தலா 14.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2023ல் அரசு மற்றும் சிண்டிகேட்டிடம் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழக பெயரில், முகவரியில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழகத்தின் 2024 சதுர அடி நிலத்தை எந்த அனுமதியுமில்லாமல் பயன்படுத்தியுள்ளனர். அரசு அனுமதியின்றி ஐ.டி.டி சி என்ற பெயரை பியூட்டர் என பெயர் மாற்றம் செய்து, 4 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தங்களில் பணம் பரிமாறப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது” என்று விளக்கமளித்தார்.

“புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி தலையிட முடியும்? பணபரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என்று ஜெகநாதன் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு  பதில் கூறிய, ஜெகநாதன் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கும்போது, “2013ல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதும், இன்னும் அந்த நிறுவனம் செயல்பட துவங்கவில்லை. 2023ல் பெயர் மாற்றம், நிலம் ஒதுக்கிடு தொடர்பாகவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய பல்கலை சிண்டிகேட்டில் அனுமதி கோரப்பட்டது. இவை அனைத்துமே பொது வெளியில் உள்ளது. ஒரு ரூபாய் கூட பரிமாறவில்லை… உயர் கல்வித்துறை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் காவல் துறை தலையிட முடியாது” என்றார்.

 அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வழக்கில் ஜெகநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஜெகன்நாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க கோரியபோது,​​ அதற்கு மறுப்பு தெரிவித்த மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதை எதிர்த்த வழக்கு நாளை (ஜனவரி 19) விசாரணைக்கு வருகிறது. அனைத்து ஒப்பந்தங்களும் கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டுள்ளன” என்றார்.

இதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறிய நீதிபதி, விசாரணையை, இன்றைய தேதிக்கு தள்ளிவைத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து,  வழக்கு இன்று (ஜன.19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன்வைக்க இருப்பதால் வழக்கின் விசாரணையை சற்று நேரம் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், காவல்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து விட்டதாக வும், அதிலிருந்து ஜெகநாதனின் செயல்பாடு எந்தவித குற்ற நோக்கத்துடன் இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறி, காவல்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

ஆனால் விசாரணைக்கு தடைவிதிக்கக் கூடாது என காவல்துறை தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ‘தடையை நீக்கக் கோரி தனி மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்” எனக் கூறி, வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.