சென்னை:  வீட்டு வேலை சய்த பட்டியலின இளம்பெண் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  திமுக எம்எல்ஏ கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி உள்ளனர்.

 “பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக அந்த இளம்பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானத. இது தொடர்பாக காவல்துறை உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தனது எக்ஸ் தளத்தில், “சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நாம்தமிழர் கட்சியின் சீமான்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் அப்பெண்ணின் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்பெண்ணுக்கு நடந்தேறியது சொல்லவியலா மனிதவதை! குரூரத்தின் உச்சம்!

எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஊதியத்தை வழங்காது, இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாதவகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியும், தினந்தோறும் துன்புறுத்தியும் வந்த அக்குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரது குடும்பமெனும் அதிகாரத்திமிரே மனிதத்தன்மையற்ற இக்கொடூரங்களை அப்பெண்ணின் மீது பாய்ச்சுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறதென்பது வெளிப்படையானதாகும். எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இக்கோரத்தாக்குதல்களும், வன்முறைவெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும்.

ஆகவே, தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, இளம் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கித் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

திமுக எம்எல்ஏ கருணாநிதி – மகன் மருமகள்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், வறுமையின் காரணமாக வீட்டுவேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணை திரு.கருணாநிதி அவர்களின் மகனும், மருமகளும் சேர்ந்து நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையாக தாக்கி துன்புறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நன்றாக படிக்க வைக்கிறோம், படிப்புக் கட்டணத்தையும் நாங்களே செலுத்துகிறோம் என ஆசைவார்த்தைகள் கூறி பணிக்கு சேர்ந்தபின் நாள்தோறும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் குடும்பம் என்ற அதிகாரப்போக்கே இதுபோன்ற அறுவறுக்கத்தக்க வன்முறைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடக் காரணம் என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தி, மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்களின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Video: Thanks Angusam

முன்னதாக சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ ஐ.கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் பணிபுரிந்த 18 வயது தலித் இளம்பெண் பலத்த காயங்களுடன் வீடியோ வெளியானது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த  பட்டியலின  இளம்பெண்,  பொங்கலுக்கு அடுத்த நாளான ஜனவரி 16ஆம் தேதி பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவ மனையில்    அனுமதிக்கப்பட்டார்.   இளம்பெண்ணின்  முகம் மற்றும் உடலில் சிகரெட் தீக்காயங்கள், காயங்கள் மற்றும் காயங்கள் காணப்பட்டது,  பொங்கல் பண்டிகைக்காக உளுந்தூர்பேட்டையில் உள்ள அவரது தாயார் வீட்டில் இறக்கிவிடப்பட்ட பிறகுதான் சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிந்தாக கூறப்பட்டது.

அந்த இளம்பெண் வெளியிட்ட வீடியோ தொடர்பாக,  நீலாங்கரை  காவல் நிலையத்தில்  இருந்து இன்னும் புகார் பெறவில்லை என்றும், உளுந்தூர்பேட்டை போலீசில் இருந்து தகவல் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறுமியின் வாக்குமூலத்தில்,  சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் வைத்து கருணாநிதியின் மகன் ஆண்டோவை திருமணம் செய்து கொண்ட மெர்லினா தன்னை கொடூரமாக தாக்கியதாக  குற்றம் சாட்டியுள்ள அந்த இளம்பெண் தான்,  12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த பிறகு எட்டு மாதங்களுக்கு முன்பு ஆன்டோவின் வீட்டில் வீட்டு வேலை செய்யத் தொடங்கியதாகவும், ஆனால், அவர்களின் கொடுமை காரணமாக வேலை செய்ய பிடிக்கவில்லை என்று கூறியதாகவும், ஆனால், அவர்கள் தனது குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக மிரட்டி, என்னை விடுவிக்க மறுத்துடன், மெர்லினா தன்னை அடித்து, சிகரெட்டால் தோலை எரித்து, முடியைக் குட்டையாக வெட்டியதாக  தொடர்ந்து பணி செய்ய வலியுறுத்தியதாக குற்றம் சுமத்தியிருக்கிறார்.

மேலும், நிர்வாணப் படுத்துவது, உடலில் சூடு போடுவது, கரண்டியால் மார்பில் அடிப்பது, தீக்காயங்கள் ஏற்படுத்துவது, ரத்தக்காயங்கள் ஏற்படுத்துவது, சாதி ரீதியாக இழிவாகப் பேசுவது, பொருளாதார ரீதியாக எதுவும் இல்லாதவள்தானே என்று இழிவு படுத்துவது என்கிற முறையில் மிகக் கொடூரமாக சித்திரவதைகளை செய்துள்ளார். ஆண்டோவும் ஓரிருமுறை தாக்கியுள்ளார். காலை முதல் இரவு வரை மிகக் கடுமையாக வேலைகள் கொடுப்பது, சமைப்பது முதல் துணி துவைப்பது வரை வீட்டில் இருக்கிற அனைத்து வேலைகளையும் அந்த சிறுமியின் மீது இரக்கம் இல்லாமல் திணித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இதையடுத்து,  சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள வீட்டில்  அந்த இளம்பெண்ணின்  தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். நிதி நெருக்கடி காரணமாக, தனது மகளை திமுக எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் வேலை செய்ய அனுமதித்தார். அவர்கள் தனது மக்களை உயர்கல்வி படிக்க வைப்பதாக உறுதி அளித்ததால், தான் வேலைக்கு சேர்த்ததாகவும், ஆனால், அவர்கள் தனது மகளை கொடுமைப்படுத்தி உள்ளனர்  கடந்த எட்டு மாதங்களில்,  தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லக் கூடாது என எனது மகளை மெர்லினா  மிரட்டி வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும், தான் தனது மகளை பொங்கலுக்கு வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்திய பிறகு, மெர்லினா  தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து வெளியே சொன்னால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த பிறகு, எனது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் என்று கூறியிருகிறார்.

ரசியல் கட்சியினரின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து, வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக  எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.