தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மே 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.ஜெய்சந்திரன் அவர்களின் தலைமையில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி செப்.30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்கவில்லை. இந்நிலையில் கால அவகாசம் வழங்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.
டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி .
இதனைத் தொடர்ந்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் நவம்பர் 22 அன்று காலை 8 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.