டில்லி:

மோடி கேர் மருத்துவ திட்டத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்துக்கு பிரபல மருத்துவமனைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆண்டுக்கு 10 கோடி பேருக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கும் ‘‘ஆயுஷ்மேன் பாரத்’’ மருத்துவ திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்துக்கு நிதிய ஆயோக் மற்றும் சுகாதார துறை இணைந்து மருத்துவ கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளது. இந்த கட்டணத்தின் தங்களுக்கு உடன்பாடில்லை என்று பிரபல மருத்துவமனைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஃபோர்டிஸ், அப்பலோ, மெடான்தால நாராயணா ஹெல்த் உள்ளிட்ட சில மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் நிதி ஆயோக் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டண விகிதம் மிக குறைவு. இதன் மூலம் தரமான சிகிச்சையை அளிக்க இயலாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கட்டண நிர்ணயத்தில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என்று அரசு தெரிவித்துள்ளது. கட்டணங்கள் அனைத்தும் கவனமாக நிர்ணயம் செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுவிட்டது. தேசிய அளவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டணத்தில் 10 சதவீதம் வரை மாற்றம் செய்து கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு 30 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.