டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் 3பிரபல நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார். டிசம்பர் 4ந்தேதி உலக நாடுகளைச் சேர்ந்த 100 பேர் தடுப்பூசி தொடர்பாக இந்தியா வரும் நிலையில், பிரதமர் இன்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில்  இந்தியாவும் முக்கிய பங்காற்றி வருகிறது. நாடுமுழுவதும்,  கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்த்து வருகிறது. தற்போது 3வது கட்டமாக இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  இந்த தடுப்பூசிகள் டிசம்பர் இறுதி அல்லது 2021 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.  முதலாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்து வரும, ‘ஜைகோவ்-டி’  என்ற தடுப்பூசி குறித்து பிரதமர் ஆய்வு செய்கிறார்.  இந்த தடுப்பூசி தற்போது 2வது கட்ட சோதனையில் உள்ளது.

அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் புனே செல்கிறார். அங்கு பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான  சீரம் இன்ஸ்டிடியூட் ஆலைக்கு செல்கிறார். அந்த நிறுவனம், உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகாவுடனும், இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும் இணைந்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

இந்த ஆலையில் பிரதமர்  பிற்பகல் 2.30 மணிவரை அங்கு ஆய்வு செய்கிறார். அப்போது, தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்  என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் செல்கிறார். அங்கு  ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செல்கிறார். இந்த நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி, 3-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிகிறார்.

கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும்,  100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி இந்தியா வர உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்கிறார்.

கொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை!