புதுடெல்லி:
சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டின் முதல் உரையை இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி, உரையாற்றினார்.

இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வரும் 2023ம் ஆண்டு, சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக கொண்டாடுப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்குறிப்பிட்டு, சென்னையை சேர்ந்த ஸ்ரீதேவி வரதராஜன் என்பவர், கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்தியாவின் சிறுதானியம் தொடர்பான விவரங்களை கூறியுள்ள அவர், மன் கி பாத்தில் சிறுதானியங்கள் குறித்து பேச வேண்டும் எனக்கூறியிருந்தார். 2023ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதனை இந்தியா முன்மொழிந்தது. 70 நாடுகள் ஏற்றுக்கொண்டன. சிறுதானியங்கள், பருப்பு வகைகள் நமது விவசாயத்திலும், கலாசாரம் மற்றும் பண்பாடு ரீதியாகவும் ஒரு அங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.