அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுடன் பட்டம் விட்டு விளையாடினார்.

இந்திய பிரதமர் மோடி, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டார்.

முதல்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் உற்சாக வரவேற்பு அளித்தார். அதைத் தொடர்ந்து,   போரில் வீரமரணமடைந்த ராணுவவீரர்களுக்கு மலர்வளையம் அஞ்சலி செலுத்தினார்.

பிறகு  இந்தோனேசியா பிரதமர் ஜோகோ விடோடோவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்தியா, எப்போதும் இந்தோனேசியாவிற்கு உறுதுணையாக நிற்கும். சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி மக்கள்  பலியானது மிகவும் கவலை அளிக்கிறது.

இந்தோ-பசுபிக் பகுதிகளில் மட்டுமின்றி, அதையும் கடந்து அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தும் சக்தி இந்தியா-ஏசியன் கூட்டுறவிற்கு இருக்கிறது. இந்தியா மற்றும் இந்தோனேசியா இந்தோ-பசுபிக் பகுதியினை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது,” என்று மோடி தெரிவித்தார்

இந்த நிலையில், ஜகர்த்தாவில் நடைபெற்ற பட்டம் விடும் கண்காட்சியில்   பிரதமர் மோடி பங்கேற்றார்.  இந்தோனேசியா பிரதமருடன் பட்டம் விட்டு விளையாடினார்.