மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த கலவரத்தை அடுத்து ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து பைரன் சிங் பிப்ரவரி 9ம் தேதி ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து வேறு முதல்வரை தேர்வு செய்ய பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் அமித்ஷா.

அமித்ஷாவின் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

2022ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற செய்ததன் மூலம் அக்கட்சியின் உண்மையான தலைவராகப் பாராட்டப்பட்டவர் பைரன் சிங்.

மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவரான பைரன் சிங் அம்மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட குக்கி சமூக மக்களிடமும் அப்போது பாராட்டப்பட்டார்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மெய்தி மற்றும் குக்கி சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அம்மாநிலத்தில் வசிக்கும் குக்கி சமுதாய மக்களிடம் மட்டுமன்றி பாஜக-வில் உள்ள குக்கி சமூக எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவை இழந்தார் பைரன் சிங்.

பைரன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று 2023ம் ஆண்டு மே மாதம் முதல் அக்கட்சியில் பிளவு ஏற்பட்ட நிலையில் மத்திய அரசு மற்றும் பாஜக மேலிடத்தின் தயவால் ஆட்சியை தொடர்ந்து வந்தார் பைரன் சிங். மாநில தலைமையை விமர்சிப்பவர்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, மணிப்பூர் வன்முறைத் தீயில் மூழ்கியதை அடுத்து, குக்கி-சோ மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான பதட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மெய்தி சமூகம் இம்பால் பள்ளத்தாக்கிலிருந்து குக்கி-சோவை விரட்டியுள்ளது, வீடுகளையும் வழிபாட்டுத் தலங்களையும் அழித்துள்ளனர்.

இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பைரன் சிங் ராஜினாமா செய்த நிலையில் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

மணிப்பூரில், தனிநபர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல் தீர்வு மட்டுமே குக்கி-சோவை மீட்டெடுக்க முடியும் என்றும் இது ஒரு தலைவரின் ராஜினாமாவுக்கு அப்பாற்பட்டவை என்றும் பழங்குடியினத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரம் : பாஜக எம்.எல்.ஏ.க்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் அமித் ஷா… சுமூக முடிவு ஏற்படுமா ?